சுனாமி அலையே!
சுனாமி அலையே!
நிதானம் இழந்து போனாயே!
உன் வினாடி நேர விபரீதத்தால்
அநாதையாகிப் போனோமே!
நெஞ்சு பிளந்ததுவே!
இவ்வினோத அலையால்
மாண்டோரைக் காணுங்கால்
நெஞ்சு பிளந்ததுவே!
பால் மனம் மாரா பச்சிளம் குழந்தைகள்
நஞ்சேதும் கலந்திடா இளம் பிஞ்சு மனங்கள்
அடித்துப் போயினரே!
ஆர்ப்பரித்த கடலாலே!
உன் ஆர்ப்பாட்ட
அலையாலே அடித்துப்போயினரே!
எங்கு நோக்கினும் அழுகுரல்கள்,
மரண ஓலங்கள்
சின்னாபின்னமாகிப்போன சிறுசுகள்!
என்செய்தோம் கடல்தாயே!
எமக்கு நீ வன்செய்தாய்?
காலச்சுவட்டின் சரித்திரத்தில் கால்பதிக்க — உன்
கோரத்தாண்டவத்தை
அரங்கேற்றி மகிழ்ந்தனையோ?
அலைகடலே! உனக்கு
வேகம் வேண்டும்தான்
அதேப்போல் விவேகமும் வேண்டாமா?
நிதம் நிதம் உன் கடலோர அலைமேலே
கால்பதித்து மகிழ்ந்தவரை
வதம் செய்துவிட்டாயே!
கடல் தாயே!
ஏன் இந்தக் கோர விளையாட்டு?
கடல் கடந்து திரவியம் தேடும் எங்களை
ஏனோ நீ
கரை கடந்து கபளீகரம் செய்தாய்!
உன் வினாடி நேர எழுச்சியால் — அந்தோ!
எமக்கு வாழ்க்கை இல்லையாகிப் போனதே!
உன் ஆணவப் போக்கை அழித்துவிடு!
வன்செயும் குணத்தை ஒழித்துவிடு!
மாண்டது மக்கள் அல்ல
உன் அகம்பாவம் என்பதை நினைத்துவிடு!
அமைதிக் கடலாய், தவழ்ந்த அழகுக் கடலே!
எமை இதமான காற்றாலே
தாலாட்டி மகிழ்வூட்டிய, நீயா
எங்களுக்கு எமனாகிப் போனாய்?
இடிந்துபோன வீடுகள்,
நொடிந்து போன இதயங்கள்,
சிதைந்து போன உடல்கள்,
புதைந்து போன உயிர்கள்,
தோண்டத் தோண்டப் பிணங்கள்!
போதும் போதும் சுனாமி அலையே — உன்;
பினாமி கூட இனி எங்களை சீண்டக்கூடாது!
உரிமைகோர யாருமின்றி
அடக்கம் செய்ய வழியுமின்றி
குவியல் குவியலாய்ப் பிணங்கள்
ஜாதி, மத பேதமற்ற,
சமதர்ம சமுதாயம்
சவக்குழியிலா மலரவேண்டும்?
உண்ண உணவின்றி,
உடுக்க உடையின்றி
ஒதுங்க இடமின்றி,
வாழ வழியின்றி,
நிர்க்கதியானோம்,
நிராதரவாய்ப் போனோம்!
உறவிழந்தோம், உடமை இழந்தோம்,
ஈடு இணையற்ற
அன்புச் செல்வங்களை இழந்தோம்!
அலைகடலே! இனி இழக்க
எங்களிடம் மிஞ்சி இருப்பது
உணர்வற்ற உயிர்தான்!
சீற்றமிகு சுனாமியே!
மரணத்தின் விளிம்பு சென்று
மீண்டு வந்து எங்களை
மீண்டும் கொண்டு செல்!
ஒப்பாரி வைக்கக்கூட ஆள் இல்லாத
அப்பாவிப் பிணங்களாய்,
அடையாளம் காணக்கூட வழியில்லாத
அனாதைப் புழுக்களாய்
நாங்கள் செத்து மடிகிறோம்!
வேளாங்கண்ணி மேரி மாதாவே!
அந்தக் கருப்பு ஞாயிறில்
உன் புகழ்பாடும் நாகப்பட்டினம்!
சோகப்பட்டினம் ஆனதுவே!
நடைப்பயிற்சி சென்றோர்க்கு — சுனாமி அலை
விடை கொடுத்து அனுப்பியதுவே!
உன் இதமான கடற்பரப்பில்
விளையாடச் சென்றோருக்கு
விளையாட்டு வினையாகிவிட்டதுவே!
நோய்தாக்கி மடித்தோரைப் பார்த்ததுண்டு!
ஒளிரும் இடிதாக்கி இறந்தோரைக் கண்டதுண்டு!
சுனாமி அலை தாக்கி
சிதைத்தோரைக் கண்டதில்லை!
கடல் அம்மா எமைத் தாக்கி வதைத்தது
ஏன் அம்மா?
பொறுத்தது போதும் பொங்கி எழு என்று
உனக்கு யார் இட்டார் கட்டளை?
எமை வதைத்தது போதும் — மண்ணில்
புதைத்தது போதும், சிதைத்தது போதும்,
சீரழித்தது போதும், துடித்தது போதும்,
உயிரைப் பறித்தது போதும்,
கொதித்தது போதும்,
எம்பிக் குதித்தது போதும்!
சுனாமி அலையே நிறுத்திவிடு
கடல் கொந்தளிப்பை
மதித்து விடு உடன் எம் தவிப்பை!