சுனாமியே! சிந்திப்பாய்! விமர்சனம்

சமீபத்தில் ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்த போது சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றும் நண்பர் திரு W.K. சர்வோதய ராமலிங்கத்தைச் சந்திக்க நேர்ந்தது. சுனாமி அடித்தபோது தான் எழுதியக் கவிதையொன்று TCC Digest (Nov-Dec 2010) ல் வெளியாகியிருப்பதாகத் தெரிவித்தார். TCC Digest ஆசிரியர் நண்பர் திரு ராஜ்சேகரிடம் அப்பத்திரிகை வாங்கிப் படித்தேன். சுனாமியே! சிந்திப்பாய்! என்ற பெயரில் ஒரு மிக அருமையான கவிதை.

உயிரில்லாத பொருளை உயிருள்ள பொருளாகக் கருதி அதனுடன் பேசுவதை ஆங்கில இலக்கிய விமர்சனத்தில் Personification என்பார்கள். தமிழில் அதற்கு இணையான ஒரு வார்த்தை நான் இதுவரை சந்தித்திருக்கவில்லை என்பதால் ஆங்கிலத்துக்கு இணையாக அதை “மனிதனாக்குதல்” என்று சொல்வேன்.

இக்கவிதையில் கவிஞர் சுனாமியை மனிதனாக்கி அதைக் கடல் தாயின் கோப அலையாகவோ, விளையாட்டாகவோ, வரலாற்றில் இடம் பெற முயற்சியாகவோ — இவ்வாறு பலவிதமாக விவரிக்கிறார்.

கவிதையில் மூன்று வகை எண்ணங்கள் ஓங்கி நிற்கின்றன:

1) இந்த கொடூரத்துக்குக் காரணம் என்ன?

மனிதர்களுக்கு தாயாக இருந்து வந்த கடல் ஏன் திடீரென்று கொடூரமாகத் தாக்கி ஆயிரக்கணக்கானோரை உயிரிழக்கச் செய்தது, என்ற கேள்வி கவிதை முழுவதும் ஒலிக்கிறது:

கடல் அம்மா எமைத் தாக்கி வதைத்தது
ஏன் அம்மா?

கடலம்மாவின் அன்பு திடீரென கொடூரமாக மாறியது கவிஞருக்குப் புரிவதில்லை:

நிதம் நிதம் உன் கடலோர அலைமேலே
கால்பதித்து மகிழ்ந்தவரை
வதம் செய்துவிட்டாயே!
கடல் தாயே!
ஏன் இந்தக் கோர விளையாட்டு?

தன் உடல் மீது பயணம் செய்து வசதி வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் செல்லப் பிள்ளைகளையே கடல் தாய் வதம் செய்ய காரணம் என்ன?

கடல் கடந்து திரவியம் தேடும் எங்களை
ஏனோ நீ
கரை கடந்து கபளீகரம் செய்தாய்!

அதே போல்:

அமைதிக் கடலாய், தவழ்ந்த அழகுக் கடலே!
எமை இதமான காற்றாலே
தாலாட்டி மகிழ்வூட்டிய, நீயா
எங்களுக்கு எமனாகிப் போனாய்?

மனிதன் கடல் அன்னையின் கோபத்துக்கு அடிக்கடி ஆளாகியிருந்தால் அதற்கு பழகியிருப்பார், ஆனால் இதுவரை இப்படிப்பட்ட நிலை வந்திராத காரணத்தினால், அவர் குழம்புகிறார்:

நோய்தாக்கி மடித்தோரைப் பார்த்ததுண்டு!
ஒளிரும் இடிதாக்கி இறந்தோரைக் கண்டதுண்டு!
சுனாமி அலை தாக்கி
சிதைத்தோரைக் கண்டதில்லை!

அன்பு காட்டும் தாய் காரணமில்லாமல் உயிர் திண்ணும் ராட்சசியாக மாறுவதில்லையே. மனிதன் செய்த தவறுக்கு இது கடல் அன்னை கொடுத்த தண்டனையோ?

என்செய்தோம் கடல்தாயே!
எமக்கு நீ வன்செய்தாய்?

எப்பொழுதும் நிதானமாக, அன்பாக இருந்த கடல் அன்னை ஒருவேளை இன்னொருவர் கட்டாயப்படுத்தி இந்தக் கோரச் செயலில் ஈடுபட்டிருப்பாரா?

பொறுத்தது போதும் பொங்கி எழு என்று
உனக்கு யார் இட்டார் கட்டளை?

கடல் தாயின் இந்தக் கொடூரச் செயலுக்கு வேறெந்தக் காரணமும் தேட முடியாத கவிஞருக்கு, ஒருவேளை சரித்திரத்தில் தனக்கு ஒரு இடம் பிடிக்கக் கடல் இப்படி செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது:

காலச்சுவட்டின் சரித்திரத்தில் கால்பதிக்க — உன்
கோரத்தாண்டவத்தை
அரங்கேற்றி மகிழ்ந்தனையோ?

இன்னொரு காரணமும் இருக்கலாம் என்று தோன்றுகிறது கவிஞருக்கு: ஒருவேளை ஜாதி-மத பேதங்களை ஒழிக்க கடல் தாய் இவ்வாறு செய்திருப்பாரோ. ஆனால், சவங்களான பிறகு சமத்துவம் கிடைக்க அர்த்தம் என்ன?

உரிமைகோர யாருமின்றி
அடக்கம் செய்ய வழியுமின்றி
குவியல் குவியலாய்ப் பிணங்கள்
ஜாதி, மத பேதமற்ற,
சமதர்ம சமுதாயம்
சவக்குழியிலா மலரவேண்டும்?

2) அகம்பாவத்தைக் காட்டியதில் கோபம்:

மனிதனைச் செல்லமாக நடத்தி வந்த கடல் தாய் பிணங்களாக்கும் அரக்கராக மாறியதற்கு காரணம் தேடும் கவிஞர் ஒருவேளை இதற்கு கடலின் அகம்பாவம் தான் காரணமாக இருக்குமோ, தனக்கு வரலாற்றில் இடம் பிடிக்க அவள் அப்படி செய்திருப்பாளோ என்று எண்ணம் கோபத்தை வரவழைக்கிறது:

நிதானம் இழந்து போனாயே!

சிறு குழந்தைகளுக்குக் கூட கருணை காட்டவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார் கவிஞர்:

பால் மனம் மாரா பச்சிளம் குழந்தைகள்
நஞ்சேதும் கலந்திடா இளம் பிஞ்சு மனங்கள்
அடித்துப் போயினரே!
ஆர்ப்பரித்த கடலாலே!
உன் ஆர்ப்பாட்ட
அலையாலே அடித்துப்போயினரே!


எங்கு நோக்கினும் அழுகுரல்கள்,
மரண ஓலங்கள்
சின்னாபின்னமாகிப்போன சிறுசுகள்!

கோபத்தில் கவிஞர் கடலைத் திட்ட ஆரம்பிக்கிறார்:

அலைகடலே! உனக்கு
வேகம் வேண்டும்தான்
அதேப்போல் விவேகமும் வேண்டாமா?

3)எச்சரிக்கை:

கோபம் ஏறு ஏறு கவிஞர் கடலை எச்சரிக்க ஆரம்பிக்கிறார்.


உன் ஆணவப் போக்கை அழித்துவிடு!

இன்னொரு இடத்தில்:

வன்செயும் குணத்தை ஒழித்துவிடு!
மாண்டது மக்கள் அல்ல
உன் அகம்பாவம் என்பதை நினைத்துவிடு!

போதும் போதும் சுனாமி அலையே — உன்;
பினாமி கூட இனி எங்களை சீண்டக்கூடாது!

எமை வதைத்தது போதும் — மண்ணில்
புதைத்தது போதும், சிதைத்தது போதும்,
சீரழித்தது போதும், துடித்தது போதும்,
உயிரைப் பறித்தது போதும்,
கொதித்தது போதும்,
எம்பிக் குதித்தது போதும்!

சுனாமி அலையே நிறுத்திவிடு
கடல் கொந்தளிப்பை
மதித்து விடு உடன் எம் தவிப்பை!

இவ்வாறு கவிஞர் சுனாமி மீது தன் கோபத்தைக் காட்டி அதை ஒழுங்காக நடந்துகொள்ள எச்சரிக்கிறார்

இக்கவிதையில் கவிஞர் ஒரு குழந்தை தன் தாயுடன் நடந்துகொள்வதைப் போலவே நடந்துகொள்கிறார்.

தாய் ஒரு நாள் திடீரென்று குழந்தையை அடிக்கும்போது குழந்தை குழம்புகிறது. “இது வரை என் தாய் இப்படி செய்ததே இல்லையே, இன்று ஏன் திடீரென்று?” — காரணம் தேடுகிறது. சரியான காரணம் கிடைக்கவில்லையானால் — சும்மா விளையாட்டுக்காகச் செய்திருப்பாரோ அல்லது தன் பலத்தைக் காட்டும் நோக்குடன் செய்திருப்பாரோ — என்று சந்தேகம் எழ மகனுக்குக் கோபம் வருகிறது. “இதை உடனே நிறுத்து” என்று எச்சரிக்கிறார் தாய்யை. இதேதான் இநதக் கவிதையில் பார்க்கிறோம்.

கவிதையின் அர்த்தத்தை சற்று விரிவுபடுத்தினால், “சிந்திப்பாய்!” என்று ஆலோசனை கோபம் ஆகிய சுனாமிக்கு ஆளாகும் மனிதர்களுக்கும் பொருந்தும். சுனாமியாக எகிரி விழும் மனிதன் அதனால் அவருக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் என்னப் பாதிப்பு வரும் என்பதைச் சிந்திக்க கவிஞர் ஆலோசனை சொல்வது போல் தோன்றுகிறது.

மொத்தத்தில் ஒரு அழகான, அர்த்தமுள்ள, சிந்திக்கத் தூண்டும் கவிதை. எழுத்தாளருக்கும், இதை வெளியிட்டு TCC Digest க்கும் வாழ்த்துக்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s